பார்சல் வாங்கிச் சென்ற சிக்கனில் எலும்பில்லை எனக்கூறி ஹோட்டல் சப்ளையரை திமுக பிரமுகர் தாக்கியதில் காது கேளாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை அருகே சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த 6-ஆம் தேதி சென்னீர்குப்பம் திமுக மாணவர் அணியைச் சேர்ந்த கார்த்தி, சிக்கன் ப்ரை பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டில் சாப்பிட பார்த்தபோது சிக்கன் கறியில் எலும்பு இல்லை.  எலும்பை கடித்து சாப்பிட முடியாமல் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பருடன் ஓட்டலுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கடையின் சப்ளையர் சாகுல் அமீது அவரை சமாதானம் செய்துள்ளார். ஆத்திரம் தீராத கார்த்தி சப்ளையர் சாகுல் கண்ணத்தில் தாக்கியுள்ளார்.  இதனால் சாகுல் அமீது நிலை குலைந்து போயுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கன்னத்தில் அறைந்ததில் சாகுல் அமீதுக்கு காது கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடை உரிமையாளர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

ஆனால் சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் பூந்தமல்லி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஓட்டல் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கெனவே சென்னை, விருகம்பாக்கத்தில் ஓட்டலில் பிரியாணி கொடுக்கவில்லை எனக்கூறி ஊழியரிடம் தகராறில் ஈடுப்பட்ட விவகாரங்களில் திமுக பிரமுகர்கள் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் ஒரு திமுக பிரமுகர் சிக்கனில் எலும்பில்லை எனக் கூறி சப்ளையரை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹோட்டலுக்கு சென்று சமாதானப்படுத்த மு.க.ஸ்டாலின் வருவாரா? என்கிற எதிர்பார்ப்பு சென்னீர்குப்பம் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.