ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் புதிய உயர் நீதிமன்ற கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.அந்த விழாவில் அசோக் கெலாட் பேசுகையில் கூறியதாவது: 

நாடே கவலையில் உள்ளது. நீதித்துறை என்றால் சத்தியத்துடன் நிற்பது. காந்திஜி சொன்னதுபோல் உண்மைதான் கடவுள், கடவுள்தான் உண்மை. ஊழல் என்று வரும் போது, மக்கள் மனுக்கள் தாக்கல் செய்வதையும், உச்ச நீதிமன்றம் சு மோட்டு (தானாக முன்வந்து விசாரணை) மேற்கொள்வதையும் பல சந்தர்பங்களில் பார்த்திருக்கிறேன்.

 ஊழல் குற்றச்சாட்டுகளில், வருமான வரித்துறை, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு மக்கள் அனுப்புகிறார்கள்.அரசியல் கட்சிகளுக்கான நிதி சட்டவிரோதமான ஆதாரங்களில் இருந்து வருவது நிற்கும் வரை, ஊழலை கட்டுப்படுத்துவது குறித்து பேசுவதில் அர்த்தம் இல்லை. 

புதிதாக ஒரு அரசியல் தலைவர் தேர்தல் போட்டியிடுகிறார் என்றாலும் அவரும் சட்டத்துக்கு புறம்பான வழிமுறையில் பணத்தை பெற தொடங்குகிறார். அரசியலின் முழு ஆட்டமும் கருப்பு பணத்தை சார்ந்தே உள்ளது. ரொக்கம், செக் அல்லது பத்திரங்கள் வடிவத்தில் கருப்பு பணம் அரசியல் கட்சிகளுக்கு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.