no any disturb for admk rule in tamilnadu by dmk...karunanidhi told

உடல் நலக்குறை குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஏதாவது நடந்தால் அதிமுக இரண்டாக உடைந்துவிடும் என்றும், அப்போது ஏதாவது ஒரு அணிக்கு ஆதரவு தந்தோ அல்லது ஏதாவது ஒரு அணியின் ஆதரவிலோ திமுக ஆட்சி அமைக்க எந்த வகையிலும் முயற்சிக்கக் கூடாது, அப்படி செய்தால் அதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதாக அக்கட்சியில் சட்டமன்ற துணைத் தலைவர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

ஜெயா தொலைக்காட்சி மற்றும் அதிமுகவுக்கு , திமுக என்றாலே எட்டிக்காயாக கசக்கும். அதுவும் ஜெயா தொலைக்காட்சியில் கருணாநிதி, ஸ்டாலின், துரை முருகன் மற்றும் திமுகவினரது புகைப்படங்களை மற்றும் காட்சிகளை முற்றிலுமாக தவிர்த்துவிடுவார்கள்.

ஆனால் தற்போது அதிமுக இரண்டாக உடைந்தபின், அரசுக்கு எதிரான செய்திகளில் ஜெயா தொலைக்காட்சி தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து பேசிய நிகழ்வை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அப்போதே அனைவரும் இது குறித்து வியந்தனர்.

இந்நிலையில் நேற்று திமுக தலைமை நிலையச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான துரை முருகனிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பி, ஜெயா டி.வி. அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த பேட்டியின்போது மனம் திறந்து பேசிய அவர், ஒரு முறை கருணாநிதி, ஆ.ராசா, பொன்முடி, நான் உள்ளிட்ட கட்சியினர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்படிருப்பது குறித்து பேச்சு எழுந்தது.

அது குறித்து பேசிய கருணாநிதி , அந்த அம்மையார் உடல் நலம் பெற்று சீக்கிரம் வந்து அரசியல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய கருணாநிதி, ஒருவேளை ஜெயலலிதாவுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் அதிமுக இரண்டாக உடைந்துவிடும் என்று தெரிவித்தாக துரை முருகன் பேட்டியின்போது கூறினார்.

அப்போது அரசியலில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையை நாம் பயன்படுத்திவிடக் கூடாது என்றும் கருணாநிதி கூறியதாக அவர் தெரிவித்தார்.

அதிமுக இரண்டாக உடைந்தால் யாராவது ஒரு அணியினர் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்பார்கள் அல்லது நாங்கள் ஆதரவு தருகிறோம் நீங்கள் ஆட்சி அமைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள். அதை திமுக ஏற்றுக்கொள்ளக் கூடாது என கருணாநிதி கூறியுள்ளார்.

அப்படி செய்தால் அதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று தொடர்ந்து கூறிய கருணாநிதி, எதுவாக இருந்தாலும் மக்களை சந்தித்து தான் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என தங்களிடம் கறாராக சொல்லிவிட்டார் என துரை முருகன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.