தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில்லை என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 3வது அணிக்கான தகுதி தங்களுக்கு வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை எதிர்கொள்வது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 3 நாட்கள் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி, சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் 2வது நாளாக நடைபெற்று வருகிறது. 

இதில், சட்டப்பேரவை தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள கட்சியை கட்டமைப்பு ரீதியாக பலப்படுத்துவது, மக்கள் நீதி மய்யத்துக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் எவை, தேர்தல் பணிகளை விரைவுபடுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணியில்லை  என கமல்ஹாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே மக்களுடன் தான் கூட்டணி என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருந்த நிலையில் இந்த தகவலை அவர் கூறியுள்ளார். 3-வது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்திற்கு வந்துவிட்டது என குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், 2013-ல் டெல்லியில் நடந்ததுபோன்ற மாற்றத்திற்கு தமிழகம் தயாராகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார். வருகிற தேர்தலில் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைக்கும் என தகவல் வெளியான நிலையில் கமல்ஹாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைய செய்துள்ளது.