தமிழகத்தில் புயல் காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக மொத்தம் 380 மரங்கள் வேருடன் சாய்ந்ததாகவும், 101 வீடுகள்  சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா வழங்கியுள்ளார். கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தை மிரட்டி வந்த நிவர் புயல் கரை கடந்துள்ளதையடுத்து கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது,  நிலப்பரப்பில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல் மிகதீவிர புயல் என்ற நிலையிலிருந்து தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்கிறது. 

இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் கடுமையான சூறாவளி காற்று வீசியதால், சென்னை, கடலூர் மாவட்ட பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இந்நிலையில் புதன்கிழமை இரவு 7 மணி முதல் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் இன்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சில இடங்களில் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், பயர் சேதங்கள் குறித்து தற்போதைக்கு தகவல் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் 2.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.இதுவரை தமிழ்நாட்டில் கடலூரில் அதிக மழை பதிவாகி உள்ளது, புதன்கிழமை இரவு 8.30 மணி முதல்  வியாழன் பிற்பகல் 2.30 மணி வரை  24.6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் புதுச்சேரியில் இந்த காலகட்டத்தில் 23.7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மழை இன்னும் தொடர்ந்து பெய்து வருகிறது, நாகப்பட்டினம் 6.3 சென்டிமீட்டர் மழையும், காரைக்காலில் 8.8 சென்டி மீட்டர் மழையும், சென்னையில் 8.9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்திக்க முதலமைச்சர் கடலூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜோதி தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மற்றும் ஐஎன்எஸ் சுமத்ரா விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு சென்றுள்ளது. தமிழ்நாட்டில் மேலும் 24 மாவட்டங்களுக்கு தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கடும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது, சென்னையில் பல இடங்களில் மின்வெட்டு தொடர்கிறது, தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் மின்விநியோகம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் சீராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.