அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் திடீரென பாஜகவில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தல் நடைபெற்றது. இதில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 74 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், 43 இடங்களில் மட்டுமே வென்றது. எனினும் தேர்தலுக்கு முன்னர் ஏற்பட்ட ஒப்பந்தபடி முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் பதவியேற்றார்.

இந்நிலையில், அருணாச்சல் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் திடீரென பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர். இந்த சம்பவம் நிதிஷ்குமாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மொத்தமுள்ள 60 இடங்களில் நிதிஷ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். அந்த 7 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் பாஜகவில் இணைந்தனர். இதனால் பாஜகவின் பலம் 48ஆக உயர்ந்துள்ளது. ஒரே கூட்டணியில் இருந்தாலும் கூட்டணி தர்மத்தை மீறி தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜக வளைத்துள்ளதால் நிதிஷ்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.