காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள் கூட்டணியில் இருந்து ஐக்‍கிய ஜனதா தளம் விலகுவது குறித்து, நான்கு மாதங்களுக்‍கு முன்பிருந்தே அக்‍கட்சியின் தலைவரும், பீகார் முதலமைச்சருமான.நிதிஷ்குமார் திட்டமிட்டு வந்தது தங்களுக்‍கு தெரியும் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவரும், துணை முதலமைச்சருமான தேஜஸ்வி ஊழல் குற்றச்சாட்டில் சிக்‍கியதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என நிதிஷ்குமார் வலியுறுத்தினார்.

ஆனால் இதற்கு தேஜஸ்வி முன்வராததால், முதலமைச்சர் பதவியை நேற்று நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். இதன்மூலம், ஐக்‍கிய ஜனதா தளம்-ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் மெகா கூட்டணி முடிவுக்‍கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து நிதிஷ்குமார் இன்று மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றுள்ளார்.

இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, நான்கு மாதங்களுக்‍கு முன்பிருந்தே மெகா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் திட்டமிட்டு வந்தது தங்களுக்‍கு தெரியும் என குறிப்பிட்டார்.

வகுப்பு வாதத்திற்கு எதிராக நிதிஷ்குமாருக்‍கு பீகார் மக்‍கள் தேர்தல் வெற்றி அளித்ததாகவும், ஆனால், அரசியல் காரணங்களுக்‍காக அவர் பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்துள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

சொந்த நலனுக்காக சிலர் எதையும் செய்வார்கள் என்பதற்கு நிதிஷ்குமார் ஒரு சிறந்த உதாரணம் என்றும், அதற்காக  தீயவர்களுடன் சேருவது இந்திய அரசியலில் சாபக்கேடு என்றும் அவர் தெரிவித்தார்.

நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கையால் அரசியலில் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது  என்று ராகுல் குற்றம்சாட்டினார்.