அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக  அமோக வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் ஆட்சி அமைந்தது. இதையடுத்து கடந்த முறை, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்தவரான, நிர்மலா சீதாராமன், தற்போது நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டு உள்ளார்.இந்தியாவின்  முதல் பெண் மத்திய நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

தற்போது, நாடாளுமன்ற  கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஜூலை, 5ல்,தன் முதல் மத்திய பட்ஜெட்டை, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். 

இந்நிலையில், பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங்கை, அவருடைய இல்லத்தில், நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்து பேசினார்.


மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மாநிலங்களவை  எம்.பி., யாக இருந்த,மன்மோகன் சிங் பதவி காலம், சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அதனால், பட்ஜெட் தாக்கலின் போது, அவர் சபையில் இருக்க மாட்டார்.

அதனால் நிர்மலா சீத்தாராமன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து ஆலோசனை செய்தததுடன் அவரிடம் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.