பொதுவாக மதுரை என்றாலே ஒரு சென்டிமெண்ட் உண்டு. மதுரையில் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும் என்பது அரசியல்வாதிகளின் நம்பிக்கை. எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கமலஹாசன் என பெரும்பாலான அரசியல்வாதிகள் மதுரை சென்டிமெண்ட்டை  பயன்படுததிக் கொண்டார்கள். இதற்கு பாஜக மட்டும் விதிவிலக்கா என்ன ? அந்த சென்ட்டிமெண்ட்டை பயன்படுத்த பாஜகவும் முடிவு செய்துள்ளது.

 

மதுரையில் முக்குலத்தோர், யாதவர், பிள்ளைமார் ஆகியோருக்கு இணையாக சௌராஷ்ட்ரா வாக்குகளும் உள்ளது. இந்த சௌராஷ்ட்ரா மக்களால்தான் கடந்த 1998 ஆம் ஆண்டு சுப்ரமணியசவாமி ஜெயித்தார். அவர்கள் பாஜகவுக்கு ஆதரவானவர்கள் என்ற ஒரு கணக்கு உள்ளது. அதே கணக்கைத்தான் தற்போது நிர்மலா சீத்தாராமன் போட்டுள்ளார்.

இதன் முதல் கட்டமாகத்தான் வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி முதன்முறையாக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் மதுரையில் தொடங்குகிறார்.

 

அது மட்டுமல்லாமல் மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு நேற்று பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை இன்னும் 18 மாதங்களில் சிட்னியாக மாறும் என அறிவித்துள்ளார்.

இதே போல மதுரை மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு பல திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. எது எப்படியோ மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மதுரையின் செல்லப்பிள்ளை ஆவாரா? மதுரை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.