Nirmala Devi that has governor level we have no doubt about Banwari Listen to Marxist
கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜஸ்ட் செய்துகொண்டால், 85 சதவிகித மதிப்பெண்ணும், மாதா மாதம் வங்கிக் கணக்கில் பணமும் தருவதாகக் கூறி பிரைன் வாஷ் செய்தத ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடபாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது தமக்கு சந்தேகம் இருப்பதாக சந்தேகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி சில மாணவிகளுடன் பேசிய ஒலிக்கோப்பு தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. பேராசிரியரின் பேச்சு இளம் பெண்களுடன் அவர் முதன்முறையாகப் பேசுவதாகவோ, இந்த இளம் பெண்களிடம் முயற்சிப்பதுதான் முதல் தடவை என்பதாகவோ புரிந்துகொள்ள முடியவில்லை.
.jpg)
மிக மிக உயர் பதவிகளில் உள்ளோர், கவர்னர் தாத்தா இல்லை, ஆளுநரை அருகிலிருந்து வீடியோ எடுத்தது, தமிழ்நாடு அரசு தேர்வாணைய விடைத்தாள் திருத்தும் பணிக்குத் தான் அழைக்கப்பட்டது, துணைவேந்தர் நியமனங்கள் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றிய பூடகமான பேச்சு, கல்லூரி மாணவியர் மறுத்த பிறகும் 'தனித்தனியாக நிதானமாக யோசித்துச் சொல்லுங்கள்' என்கிற வற்புறுத்தல், வங்கிக் கணக்கில் அதிக பணம் போடுகிறேன் என்கிற ஆசை வார்த்தை, மேல்படிப்பு எதுவானாலும் உதவிக் கிடைக்கும் என இவற்றையெல்லாம் கவனித்தால் இவை தனிநபர் ஒழுக்க மீறல் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமே இல்லை என்பதும், இதுபோன்று வேறு பலரும், பாலியல் நடவடிக்கைகளுக்குக் கல்லூரி மாணவியரிடம் வலைவிரிக்கும் வேலையைச் செய்துகொண்டுள்ளார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இது ஒரு பெரும் கிரிமினல் வலைப்பின்னலாகத் தெரிகிறது.

ஆளுநர், அவரது அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித் துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது. நிர்மலா தேவி கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். அவரைப் பின்னிருந்து இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.தென்மாநில ஆளுநர் ஒருவர் பாலியல் புகார்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், அதுகுறித்து உள் துறை அமைச்சகம் விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், சில வாரங்களுக்கு முன்னர் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதே சமயம் தமிழக ஆளுநர் தனது நியமனங்களில் நெறிமுறைகளை மீறி செயல்பட்டதையும் பார்க்க முடிந்தது. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் ‘தகுதி, திறமையைத் தாண்டி’ முறைகேடான கைமாறுகளுக்காக இவை நடக்கிறதோ என்கிற சந்தேகமும், கவலையும் எழுவது இயல்பே.

தமிழக அரசு உடனடியாக பேராசிரியர் நிர்மலா தேவியின் ஒலிக்கோப்பு மற்றும் நியமனங்கள் குறித்த அவருடைய பேச்சுகள் குறித்து குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கல்லூரி மாணவியருக்கு வலைவிரிப்பது, ஆளுநரால் இந்தக் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட நியமனங்கள் இதற்குப் பின் உள்ள சமூக விரோத கும்பல், இத்தகைய முறைகேடுகளில் உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு உள்ளிட்ட அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். கல்வி நிலையங்களில் நடைபெறும் இத்தகைய கொடுமைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தன் வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும். மேலும், இவை குறித்து உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறக்கூடிய விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இத்தகைய விசாரணை முறையாக நடைபெற வேண்டுமெனில் சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. விசாரணை முடியும் வரையில் இந்த ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களையும், உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளையும் பணியிலிருந்து விலக்கிவைக்க வேண்டும்.
தமிழகத்தையே உலுக்கியுள்ள கல்லூரி மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கும் இத்தகைய அநாகரிகமான போக்கினை எதிர்த்து முறியடித்திட தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் போர்க்குரல் எழுப்பிட வேண்டும் இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
