வைர வியாபாரி நிரவ் மோடியின் நெருங்கிய உறவினரான  மெகுல் சோக்‌ஷி பஞ்சாப் நேஷனல் வங்கியில்  942 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து மோசடி தொகையானது 13,570 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷி ஆகியோர்  நாட்டின் 2–வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 12,500 கோடி  ரூபாய் கடனாக பெற்று அதை திருப்பிச் செலுத்தவில்லை.

இந்த ஊழல் அம்பலத்துக்கு வருவதற்கு முன்பே நிரவ் மற்றும் அவரது குடும்பத்தினர்  வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன.

இந்நிலையில் அதிர்ச்சி தகவலாக கூடுதலாக ரூ.942 கோடி மோசடி நடைபெற்று உள்ளது தொடர்பாக வங்கி புகார் தெரிவித்துள்ளது. நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்‌ஷி மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் 942 கோடி ரூபாய் கடன் பெற்று அதை இதுவரை திருப்பிச் செலுத்தவில்லை என புது புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் செய்த மோசடி தொகை  13,570 கோடி ரூபாயை எட்டியுள்ளது.