நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கொள்கைப் பரப்பு செயலாளருமான மத்திய அமைச்சருமான ஆ. ராசா போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா 2009-ம் ஆண்டில் நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுத் தொகுதியான தனது சொந்த ஊர் பெரம்பலூரில் ஆ. ராசா போட்டியிடுவார் என்று திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நீலகிரி நாடாளுமன்றத் தேர்தலில் ஆ. ராசா போட்டியிடுவார் என்று தெரிகிறது. தற்போது திமுக சார்பில் கிராமங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். திமுக மகளிர் அணித் தலைவி கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் ஏராளமான இடங்களில் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றார். 

கடந்த சில நாட்களில் தூத்துக்குடியைச் சுற்றி கனிமொழி வந்தார். தூத்துக்குடியைச் சுற்றி கனிமொழி கிராம சபை கூட்டங்களில் பங்கேற்பதால், அவர் அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது. திமுக தலைமை தூத்துக்குடியில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன் என்று கனிமொழியும் தெரிவித்துவிட்டார். 

கனிமொழி போலவே முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா நீலகிரி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றுவருகிறார். நீலகிரி தொகுதியில் களமிறங்க வசதியாகவே அந்தத் தொகுதியில் அதிகளவில் கிராம சபை கூட்டங்களில் ஆ. ராசா பங்கேற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இதனால், நாடாளுமன்றத்தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ. ராசா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.