தமிழகத்தில், தமிழகம் மற்றும் பிற மாநில உரிமம் பெற்ற 4000 ஆம்னி பேருந்துகள் உள்ளன. இந்தப் பேருந்துகள் தமிழகத்தில் உள்ள முக்கியமான நகரங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால்  25.03.2020 முதல் 15 அக்டோபர் 2020 வரை ஆம்னி பேருந்துகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பிறகு 16 அக்டோபர் 2020 முதல் முதற்கட்டமாக 300 பேருந்துகள் இயக்கப்பட்டன. பிறகு படிப்படியாக உயர்ந்து பிப்ரவரி 2021 கடைசியில் 600 பேருந்துகள் வரை இயக்கப்பட்டன. 

மீண்டும் 8 மார்ச் 2021 விதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கையால் பயணிகள் வரத்து குறைந்ததால் ஆம்னி பேருந்துகள் இயக்கம் 186 பேருந்துகள் ஆக குறைந்தன. இந்நிலையில் இன்று வரும் 20.04.2021 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகள் இயக்கம் முற்றிலும் பாதிக்கப்படும். ஏற்கனவே கடந்த ஓராண்டாக ஆம்னி பேருந்துகள் சரிவர இயங்காத காரணத்தால் எங்கள் தொழில் சார்ந்தவர்களுக்கு தோராயமாக 480 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு 2 காலாண்டிற்கு தோராயமாக ரூபாய் 20 கோடி அளவிற்கு மட்டுமே சாலை வரியை தள்ளுபடி செய்தது. 

இந்த தொழிலை சார்ந்த பேருந்து உரிமையாளர்கள்,  ஓட்டுநர்கள், பேருந்து உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மெக்கானிக்குகள் மற்றும் இந்த தொழிலின் மறைமுக பணியாளர்கள் மொத்தம் 2 லட்சம் பேர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்தத் தொழிலில் 1500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு உள்ளது. இதில் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகளில் கடனாக பெற்று தொழில் செய்து வருகிறோம். கடந்த ஒரு வருடமாக பேருந்துகள் இயங்காத காரணத்தால் வங்கிகளுக்கு சரிவர கடன் தவணை கட்ட முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு தொழில் முற்றிலும் பாதிக்கப்படும். இத்தொழிலை காப்பாற்றுவதற்காக மத்திய மாநில அரசுகள் தொலைநோக்குடன் உதவிட வேண்டும். சாலை வரியை 6 மாத கால அளவுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு 50% சாலை வரியை மட்டும் வசூலிக்க வேண்டும். 

கடன் தவணைக்கான ஆறுமாத கால வட்டியை தள்ளுபடி செய்தும், 6 மாதம் கடன் தவணை கட்டுவதற்கு கால அவகாசம் கொடுத்தோம்  அதே பேருந்துகளுக்கு தொழில் செய்வதற்காக கூடுதல் கடன் தொகை கொடுத்து உதவ வேண்டும். ஆம்னி பேருந்துகள் இயங்காத காலங்களுக்கு இன்சூரன்ஸ் தள்ளுபடி செய்தும் தர வேண்டும். மற்றும் இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். கொரோனா வைரஸ் பரவாத வண்ணம் ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து, பயணிகளுக்கு வெப்ப அளவு பரிசோதித்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.