நாட்டில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடும் பயங்கரவாதிகளை பற்றிய கண்காணிப்பு, விசாரணை மற்றும் அவர்களைக் கைது செய்தல் உள்ளிட்ட பணிகளை தேசிய புலனாய்வு முகமை செய்து வருகிறது.

இந்த முகமைக்கு கூடுதல்  அதிகாரங்களை அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யபட்டது. அந்த மசோதாவின் மீது மக்களவையில் இன்று  கடும் விவாதம் நடந்தது.

இந்த கூடுதல் அதிகாரங்களின் மூலம் மாநிலங்களின் அதிகாரம் குறைக்கப்படுகிறது என்றும் எதிர்க்கட்சியினர் மிரட்டப்படலாம் என்றும் சில கட்சிகளின் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய உள்துறை அமைசச்சர் அமித் ஷா, ‘இந்த அரசு யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படாது. பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தில் மட்டுமே தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கவே இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
பலத்த விவாதத்திற்குப் பிறகு ஓட்டெடுப்பு மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.