கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான கூட்டமே முழுமையாக நடைபெறவில்லை. கடைசி கட்டத்தில் அவசர அவசரமாக பட்ஜெட் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. அரசியல் அமைப்பு சட்டப்படி ஆறு மாதத்துக்கு ஒரு முறை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடத்தியாக வேண்டும். அதன்படி செப்டம்பர் 24ம் தேதிக்குள் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் நடத்த வேண்டும். 
ஆனால், சென்னையில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மேலும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள சட்டப்பேரவைக் கட்டிடத்தில் இடநெருக்கடி உள்ளது. தற்போதைய சூழலில் அந்தக் கட்டிடத்தில் சமூக இடைவெளியுடன் எம்.எல்.ஏ.க்களை அமர வைத்து  சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, வேறு ஏதாவது இடத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சபாநாயகர் ப.தனபால் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தைப் பார்வையிட்டார். அந்த அரங்கத்தில் உள்ள மூன்றாவது தளத்தை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், “சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக கலைவாணர் அரங்கத்தைப் பார்வையிட்டேன். எங்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் என்பதை முறைப்படி அறிவிப்போம்” என்று தெரிவித்தார். 
சபாநாயகர் ப.தனபால் கலைவாணர் அரங்கத்தைப் பாரவையிட்ட நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருகிலேயே எம்.எல்.ஏ.க்கள் விடுதியும் வாகனங்களை நிறுத்த போதுமான இடம் இருப்பதாலும் கலைவாணர் அரங்கத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.