அதிமுகவில் நிலவும் குழப்பத்தை அக்கட்சியினர் விரைவில் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், அடுத்தமுறை அதிமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் ம.பொ.சி.யின் 25-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு பாஜக சார்பில் இல.கணேசன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், தமிழுக்காகப் போராடிய ம.பொ.சி.யின் தியாகம் பெரிது என்றும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற வேண்டும் என்று கூறினார். 

தமிழ், தமிழ் என்று வெறுமனே T-Shirt-ல் போட்டுக்கொண்டால் தமிழ் வாழாது என்று பேசிய இல.கணேசன், இந்தியும் தெரியாமல், தமிழும் தெரியாமல் ஒரு தலைமுறை உருவாகியிருப்பதற்கு திமுகவே காரணம் என்று குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் பாஜகவில் தேசிய அளவில் பொறுப்புகளில் உள்ளதாகப் பேசிய இல.கணேசன், ஹெச்.ராஜாவின் திறமைக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும், அது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும் என்றும் கூறினார். 

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்டம் - ஒழுங்கை சிறப்பாகக் கையாண்டு வருவதாகப் பேசிய இல.கணேசன், பாலியல் வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது யாரும் எதிர்பார்க்காத கடுமையான நடவடிக்கையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். உ.பி.யில் மக்களின் ஆதரவைப் பெற கீழே விழுவது போல் ராகுல் காந்தி நாடகமாடி உள்ளதாகவும் இல.கணேசன் குற்றம் சாட்டினார்.  அதிமுகவில் நிலவும் குழப்பங்களால் கட்சி உடையாது என்று பேசிய இல.கணேசன், அதிமுகவில் நிலவும் குழப்பங்களை அக்கட்சியினர் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், அடுத்தமுறை அதிமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.