தமிழகத்தில் தகவல், தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் திடீரென அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் நீக்கத்தால் கட்சியில் பெரிய அளவில் அதிருப்தியோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை.

தற்போது மணிகண்டன் பார்த்து வந்த துறைகளை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கவனித்து வருகிறார். ஏற்கனவே உதயகுமார் வருவாய், பேரிடர் உள்ளிட்ட துறைகளை கவனித்து வரும் நிலையில் இந்த புதிய பொறுப்புகள் அவருக்கு கடும் சுமையை ஏற்படுத்தும் என  எடப்பாடி கருதுகிறார்.

இந்நிலையில் மணிகண்டனுக்குப் பதில் அவரது இலாகாக்களை பார்த்துக் கொள்ள புதிய அமைச்சரை நியமிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இப்போது அமைச்சரவையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை நிலவுகிறது. இந்தக் குறையைத் தீர்க்க வேண்டும் என்று அதிமுகவுக்குள் அடுத்த கட்ட நகர்வுகள் ஆரம்பித்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. 

இவற்றில் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். திருவாடானை தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் மலேசியா பாண்டியனிடம் இருக்கிறது. மணிகண்டனைத் தவிர அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்றால் அது தற்போது பரமக்குடி இடைத்தேர்தலில் வென்ற சதன் பிரபாகர்தான்.

எனவே சதன் பிரபாகருக்குதான் முறைப்படி ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் என்ற பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரம் மணிகண்டனிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சர் பதவியை அதே சமூகத்தைச் சேர்ந்த இன்னொருத்தருக்கு கொடுத்து அமைச்சரவையில் இணைக்க வேண்டும் என்ற குரல்களும் அதிமுகவுக்குள் எழுந்துள்ளன. 

ஆனால் சதர்ன் பிரபாகர்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதிருப்தி நிலவும் என்றாலும், தென் மாவட்டங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆதரவைப் பொறலாம் என்றும், இது வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இதையடுத்து சதர்ன் பிரபாகர் சிரைவில் அமைச்சராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.