முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து வரும் ஸ்டாலினுக்கு சென்னை திரும்பியதும் சரியான வகையில் பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடியார்.

14 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம் தமிழகத்தில் வேட்டி சட்டை அணிந்திருந்த நீங்கள் வெளிநாடுகளில் கோட் சூட்டுக்கு மாறியது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழகத்தில் நமது பாரம்பரிய உடை தான் சரியாக இருக்கும். இப்போது கூட பாருங்கள் வேட்டி சட்டையில் தான் இருக்கிறேன்.

 

ஆனால் வெளிநாட்டில் பல்வேறு தொழில் அதிபர்களை பார்க்க வேண்டியுள்ளது எனவே அவர்கள் நாட்டின் வழக்கப்படி கோட் சூட் அணிந்திருந்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது? தமிழகம் வந்ததும் வேட்டி சட்டைக்கு மாறிவிட்டேன் பார்த்தீர்களா என்று கூறினார். இதே போல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் தொடருமா என்று முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அடுத்ததாக இஸ்ரேல் செல்ல உள்ளேன் என்று கூறி செய்தியாளர்களை திகைக்க வைத்தார் எடப்பாடி. வெளிநாட்டுப் பயணம் அனைத்துமே தமிழகத்தின் நலனுக்காகத்தான் என்றும் கூறினார். முன்னதாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தனிப்பட்ட காரணங்களுக்காக என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சந்தேகம் எழுப்பி வந்தனர். திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச் செல்வனோ முதலமைச்சர் ஏன் வெளிநாடு செல்கிறார் என்பதற்கான காரணத்தை விரைவில் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார். 

ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்ததாக இஸ்ரேல் செல்ல உள்ளதாக எடப்பாடி கூறியிருப்பது ஸ்டாலின் தரப்புக்கு கொடுத்துள்ள பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.