next controversy of minister sellur raju
தொடர்ந்து சர்ச்சையாகவே பேசி விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுசூதனனை முன்னாள் முதல்வர் எனக்கூறி மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சுக்கள் மற்றும் செயல்கள் என அனைத்துமே விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. அவரை விமர்சிப்பதற்கான வாய்ப்புகளை அவரே ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்வுதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அமைச்சர்கள் வாய்க்கு வருவதை எல்லாம் பிதற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வாயைத் திறந்தாலே சர்ச்சை தான்.
அதிலும் அமைச்சர் செல்லூர் ராஜூவே முதன்மையானவர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு சர்ச்சைகளை கிளப்பி விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளார்.
மதுரையில் வைகை ஆற்று நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோலால் தடுக்க முயன்றதன் மூலம் உலக அளவிலேயே செல்லூர் ராஜூ பிரபலமானார் என்றே கூறலாம். அதையடுத்து டெங்குவினால் யாருமே உயிரிழக்கவில்லை என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். பின்னர், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவின் உதவியோடுதான் அதிமுக ஆட்சி அமைந்தது என கூறினார். இதையடுத்து தினகரன் கூறிய ஸ்லீப்பர் செல் செல்லூர் ராஜூதான் என்ற கருத்து எழுந்ததை அடுத்து, நான் ஸ்லீப்பர் செல் இல்லை என கண்ணீர் விட்டு கதறினார்.
இப்படியாக தொடர்ச்சியாக சர்ச்சையை கிளப்பி, விமர்சனத்துக்கு ஆளாகி வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, மழை பாதிக்கப்பட்ட சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுசூதனனை முன்னாள் முதல்வர் என கூறி, மீண்டும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ, பேட்டி என்றாலே என்ன பேசுவதென்று தெரியாமல் பதறியடித்து ஏதாவது பேசி சிக்கிக் கொள்கிறார்.
அண்மையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மன்மோகன் சிங்கை பிரதமர் எனக்கூறி விமர்சனத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
