அரசியல் ரீதியாக அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வரும் தினகரன் எப்போதும் இல்லாத வகையில் செய்தியாளர்களிடம் டென்சன் ஆனார்.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு பாதகமாக வந்தது முதலே தினகரன் அப்செட்டில் இருக்கிறார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வதா? அல்லது தேர்தலை சந்திப்பதா என்பதில் தற்போது வரை தினகரன் குழப்பத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது. 

மேல்முறையீடு இல்லை என்று முடிவெடுத்துவிட்டாலும் கூட 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை எதிர்கொள்வதை நினைத்து தினகரன் கலக்கத்தில் உள்ளார். மேல்முறையீட்டுக்கு சென்றாலும் கூட பிரபல வழக்கறிஞர்களை நாட வேண்டும், அவர்களுக்கு தினசரி ஒரு அமவுன்ட் இறக்க வேண்டும். அதே தேர்தல் என்றாலும் கூட தொகுதிக்கு குறைந்தபட்சம் 5 கோடி செலவழிக்க வேண்டும். அப்படி இருந்தாலும் கூட வெற்றி உறுதி இல்லை. இது போன்ற சமயத்தில் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் வீட்டில் கிடைத்த ஆவணத்தில் தினகரனுக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக ஆவணம் கிடைத்ததும் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மதுரையில் பப்பீஸ் ஹோட்டலில் மு.க.ஸ்டாலினை தினகரன் சந்தித்ததாக அ.தி.மு.க கொளுத்திப் போட்ட தகவலும் பற்றிக் கொண்டு எரிகிறது. இந்த விவகாரத்தில் அ.ம.மு.க நிர்வாகிகள் பலரும் கூட தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு ஓ.பி.எஸ் உடன் ரகசிய சந்திப்பை நிகழ்த்திய தினகரன் இந்த ஆண்டு ஸ்டாலினை சந்தித்திருக்கலாம் என்று அ.ம.மு.க நிர்வாகிகளே பேசிக் கொள்கின்றனர்.

இதன் மூலம் தி.மு.கவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட தீவிர அ.தி.மு.க தொண்டர்களாக இருந்து அ.ம.மு.க வந்துள்ளவர்கள் தினகரனுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்த வரும் தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, மிகவும் டென்சனாக காணப்பட்டார். வழக்கமாக செய்தியாளர்களை ரொம்ப கூலாக ஹேன்டில் செய்யும் தினகரன் நேற்று மிகவும் சிரமப்பட்டு போய்விட்டார்.

 

வி.வி.மினரல்ஸ் ரெய்டு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் நீங்கள் எந்த பத்திரிகை என்று தினகரன் பதில் கேள்வி எழுப்பினார். இதற்கு முன்பு எந்த செய்தியாளர் சந்திப்பிலும் தினகரன் இப்படி கேட்டதே இல்லை. வழக்கமாக செய்தியாளர் சந்திப்பில் நீங்கள் எந்த பத்திரிகை என்று கேட்பது விஜயகாந்த் ஸ்டைல். அதுபோல் கேள்வி கேட்டதுடன் அவர் நியூஸ் ஜே என்று பதில் அளித்ததும், நான் போட்ட ட்வீட்டையே பார்க்கவில்லை என்றால் நீங்கள் என்ன ரிப்போர்ட்டர் என்றும் நக்கலடித்தார்.

இதே போல் ஸ்டாலினை சந்தித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பிய புதிய தலைமுறை செய்தியாளரிடம் அமைச்சர்களிடம் காசு வாங்கிக் கொண்டு நீங்கள் கேள்வி கேட்பதாக நான் கூட சொல்லலாம் என்று கூறி அதிர வைத்தார். இதே போல் தந்தி தொலைக்காட்சி நிரூபரிடம் நான் கூறுவதை முதலில் உங்கள் டி.வியில் போடுங்கள் அதன் பிறகு என்னை கேள்வி கேளுங்கள் என்று கோபப்பட்டார் தினகரன். 

இதனால் செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு புறப்பட்ட தினகரனை சில செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு தங்களிடம் கோபப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நான் சொல்வதை நீங்கள் டி.வியில் போடுவதில்லை, உங்கள் வசதிக்கு போட்டுக் கொள்கிறீர்கள் என்று பதில் அளித்தார் தினகரன். அதற்கு டி.வியில் என்ன வர வேண்டும் என்று எடிட்டோரியலில் உள்ளவர்கள் தான் முடிவு செய்வார்கள் என்று பதில் அளித்த செய்தியாளர்களிடம் அப்படி என்றால் நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்று கேட்டவாறே புறப்பட்டுச் சென்றார்.