அதிமுகவின்  அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டிவி இருந்தது. ஆனால் அக்கட்சி உடைந்த பிறகு சசிகலா கைவசம் ஜெயா டிவி சென்றுவிட்டது. இதையடுத்து ஜெயா டிவிக்கு க்கு போட்டியாக தற்போது ஆளுங்கட்சியாக உள்ள இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி 'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி சேனல் இன்று தொடங்கப்பட்டது.

இதற்கான லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து வைத்தனர். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் நியூஸ் ஜெ தொடங்கப்பட்டது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓபிஎஸ்  நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் உள்ளது உள்ளபடி ஒளிபரப்பு செய்யப்படும் என கூறினார், ஒட்டு வேலை, வெட்டு வேலை என எதுவும் இல்லாமல் நடுநிலையுடன் செயல்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

செய்திகளை பரபரப்புக்காக உருவாக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் தொலைக்காட்சியாக நியூஸ் ஜெ பரிணமிக்கும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு  ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவின் கருத்துகளை மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் ஊடகம் ஒன்றுக்காக நீண்ட நாட்களாக கழக தொண்டர்களும் தமிழக மக்களும் காத்திருந்தனர். அந்த வருத்தத்தைப் போக்கும் விதமாகவும் ஒன்றரைக் கோடி தொண்டர்களையும், ஏழரை கோடி தமிழகர்கன் எதிர்பார்ப்பையும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி பூர்த்தி செய்யும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

நியூஸ் ஜெ தொலைக்காட்சி விரைவில் தனது ஒளிபரப்பைத் தொடங்கும் என்றும் விழாவில் அறிவிக்கப்பட்டது. இறுதியில் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கபபட்டது.