ரஜினிகாந்த் சொன்னது போல் அதிசயம்தான் நிகழ்ந்தது எடப்பாடியார் வாழ்வில்! என்றாவது நினைத்திருப்பாரா  அவர்? இந்த மாநிலத்தின் முதல்வராக தான் மாறுவோம்! சர்வதேச நாட்டு தலைவர்களும் வியக்கும் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றுவோம், சற்றே பிசகினால் கவிழ்ந்துவிடும் நிலையிலும் கூட ஆட்சி ரதத்தை அசத்தலாக ஓட்டி பெயர் வாங்குவோம்! என்றெல்லாம். ஆனால் இவை அத்தனையும் பலித்திருக்கிறது, சொல்லப்போனால் இதையெல்லாம் தாண்டி மிகப் பெரிய அளவில்தான் எடப்பாடியார் பெயரெடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதேவேளையில் விமர்சனங்களுக்கும், அலசல்களுக்கும், ஆட்சி கவிழ்வு பற்றிய பயமுறுத்தல்களுக்கும் தொடர்ந்து ஆளாகிக் கொண்டேதான் இருக்கிறார் இ.பி.எஸ். அந்த லிஸ்டில் லேட்டஸ்டாக, தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேக  ஏற்பாடுகள் ‘எடப்பாடியார் ஆட்சிக்கு சிக்கலை தரும்’ எனும் பீதியை கெளப்பியுள்ளன. அதுவும் ராஜராஜ சோழன் மன்னனோடு, எடப்பாடியாரையும் இணைத்து பேசுவதுதான் இந்த ரணகளத்திலும் ஒரு ஆச்சரியம்!எப்படியாம்?...


அதாவது  கட்டடிட கலையில், தமிழன் இந்த உலகுக்கே முன்னோடி என்பதை விளக்கும்  அதிசயங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோயில்.  இந்த கோயிலுக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்திட திட்டமிட்டுள்ளனர். இந்த முடிவும், ஏற்பாடுகளும்தான் இப்போது ஒரு விவகாரத்தை கிளப்பியுள்ளன. 
அது இதுதான்!பதினோறு சித்தமடத்தை சேர்ந்தவர்களும், இந்து வேத மறுஇமலர்ச்சி இயக்கத்தை சேர்ந்தவர்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று தஞ்சை பெரிய கோவிலை வலம் வந்து, தமிழில் வேத மந்திரங்களை முழங்கினர். அதன் பின் ’கருவூரார் சித்தர் கூறியபடி தமிழ் வேத முறையில் கும்பாபிஷேகம் நடை பெற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் துன்பத்துக்கு ஆளாக நேரிடும்’ என்று எச்சரித்தனர். அது என்ன மீண்டும்? என கேட்டபோது, இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவரான பொன்னுசாமி “தஞ்சை பெரிய கோவிலில் இதற்கு முன் 1997ல் கும்பாபிஷேகம் ஏற்பாடானது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் நாற்பத்து எட்டு பேர் இறந்தனர்.அதன் பின் உரிய முறையிலான பரிகாரங்கள் செய்யப்படாமல், அவசர கதியில் கும்பாபிஷேகத்தை நடத்தினர். 


பரிகாரங்கள் சரி வர செய்யாததால், அதன் பின் கும்பாபிஷேகம் தள்ளிக் கொண்டே சென்று 23 ஆண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் ஏற்பாடாகிறது. ஆனால் இப்பவும் பரிகார பூஜைகளை செய்யாமல், கருவூரார் சித்தர் நெறிக்கு மாறாக, மக்கள் மற்றும் ஆட்சியாளர்களின்  நலன்களை மனதில் கொள்ளாமல் கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்ய துவங்குகின்றனர். இது நல்லதல்ல.” என்று கூறினார். இது பற்றி பேசும் ஆன்மீக மூத்தவர்களும், ”தஞ்சை பெரிய கோயிலின் நடைமுறைகளுக்கென்று சில விதிகள் உள்ளன. அதை மீறுவது ஆபத்து. கருவூரார் சித்தர் நெறிப்படி, தமிழில் பூஜைகள் செய்ய வேண்டும். கோவில் கருவறைகளில் பூஜைகள் செய்பவர்கள் உள்ளிட்ட 48 வகையான பணியாளர்கள், தமிழர்களாக இருக்க வேண்டும்! என்ற நெறிமுறைகள் உள்ளது. ஆனால் அதையெல்லாம் மன்னன் ராஜராஜ சோழன் உடனடியாக நிறைவேற்றவில்லை. இதனால் கோபமடைந்த கரூவூரார், நாடாளும் பொறுப்பிலுள்ள அரசர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், தளபதிகள் இந்த கோயிலுக்கு வந்து சென்றால், கடுமையாக தண்டிக்கப்படுவர்! என சாபம் வழங்கினார். இதனால்தான் இந்த கோயிலுக்கு வரும் அரசியல்வாதிகள் பிரச்னைக்கு ஆளாகின்றனர். 


23 வருடங்களுக்கு முன் 48 உயிர்கள் மரித்த நிலையில், உரிய பரிகாரங்களை இன்னும் செய்யாமல் இருப்பது, அந்த ஆன்மாக்களை சாந்தி அடையாமல் ஏங்கி காக்க வைத்திருக்கும் செயல்.இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் கும்பாபிஷேகம் எனும் நிலையில், தமிழக முதல்வர் எனும் முறையில் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் பரிவாரங்கள் நிச்சயம் இந்த ஆலயத்துக்கு வருவார்கள். சாப சென்டிமெண்டை  நினைத்து கோயிலினுள் வராவிட்டாலும், விமானத்தில் ஏறி நின்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வார்கள். அப்படியே செய்தாலும் அவர்களை இந்த வினை தாக்கத்தான் செய்யும். சாந்தியடையாத ஆத்மாக்கள் மற்றும் சித்தரின் வாக்கு மீறிய நிலை இவையெல்லாம் இணைந்து இ.பி.எஸ். அவர்களின் ஆட்சியை கவிழ்க்கவும் செய்யலாம், எதிர்வரும் தேர்தலில் தோல்வியடையவும் வைக்கலாம். இதெல்லாம் பொய்யில்லை. ஏற்கனவே இந்த விஷயத்தில் மண்ணை கவ்விய அரசியல் தலைவர்களே இதற்கு சான்று. எனவே முதல்வர் இந்த கோயிலின் கும்பாபிஷேக விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, ஒழுங்கு படுத்த வேண்டும். இதை அவரது நலனுக்காகவே சொல்கிறோம்.” என்று முடிக்கின்றனர். என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?