இங்கிலாந்தில் பரவி வந்த மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா, மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வருபவர்கள், சமீபத்தில் வந்தவர்கள் ஆகியோருக்கு, புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என கண்டறிய அவர்களுக்கு மரபணு வரிசைமுறை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை இந்தியாவில், 82 பேர் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 13 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் இங்கிலாந்திலிருந்து வந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்களும் அடங்குவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. மேலும், டெல்லி அரசு, இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களை இந்த மாத இறுதி வரை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இருப்பினும், இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இன்று விமான சேவை தொடங்கியது. இந்நிலையில் டெல்லி அரசு, இங்கிலாந்திலிருந்து இந்திய வரும் பயணிகள் அனைவரும், விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளது. பயணிகள், தங்கள் சொந்த செலவில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென கூறியுள்ள டெல்லி அரசு, அவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியானால் தனிமை மையத்தில் தனிமைப்படுத்தப்படுவர்கள் என்றும், கொரோனா இல்லையென்றாலும், அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்கள் வீட்டில் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.