தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையில் தி.மு.க புகார் அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான புகார்கள் குறித்து பூர்வாங்க விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகவும் விசாரணை துவங்க உள்ளது.

 

இதனிடையே மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்க தி.மு.க ஆயத்தம் ஆகி வருகிறது. என்ன தான் லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட விசாரணை என்பத முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் சேலத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை தி.மு.க மறந்துவிட வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். 

லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்து அமைச்சர்களை மிரட்டும் ஸ்டாலினை, அதே லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து விரட்ட எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் பிளான் போட்டுள்ளார். இதன் முதற்கட்டமாகத்தான் புதிய தலைமைச் செயலக முறைகேடு புகாரை விசாரித்து வந்த விசாரணை ஆணையத்தை கலைப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. மேலும் புதிய தலைமைச் செயலக முறைகேடு புகாரை இனி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என்றும் தமிழக கூறியது. அதுமட்டும் இன்றி முறைகேடு புகார் தொடர்பான ஆவணங்களும் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த ஆவணங்கள் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி முருகன் டேபிளில் உள்ளது. மேலும் நடவடிக்கையை எப்படி துவங்குவது என்றும் அதிகாரிகள் ஆலோசனையை தொடங்கியுள்ளனர். ஏதேனும் சிறிய ஆதாரம் கிடைத்தாலும் புதிய தலைமைச் செயலகம் கட்டும் போது துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினை தூக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த தகவல் ஸ்டாலின் தரப்பை அடைந்ததுமே உஷார் ஆகினர். உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி மீதான ஒரு புகாரை சுட்டிக்காட்டி அவரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்கிற ஒரு அறிக்கையை ஸ்டாலின் சுடச்சுட வெளியிட்டார். ஏனென்றால் புகாரில் சிக்கிய முருகனை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அவரிடமே தலைமைச் செயலக முறைகேடு புகார் விசாரணைக்கு சென்று இருப்பதால் நடவடிக்கை உடனடியாக துவங்கும் என்று தி.மு.க தரப்பும் எதிர்பார்க்கிறது.