ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மைக்கேல் தேவப்ரதா பத்ராவை நியமித்து, மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல் போக்குக் காரணமாக விரால் ஆச்சார்யா துணை ஆளுநர் பதவியில் இருந்து விலகிய நிலையில் ஒரு ஆண்டுக்குப்பின் இப்போது துணை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பத்ரா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளா். 

இதற்கு முன் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழுவின் நிர்வாக இயக்குநராக மைக்கேல் இருந்தார். ரிசர்வ் வங்கியில் மொத்தம் 4 துணை நிலை ஆளுநர்கள் இருக்கும் நிலையில் இதில் 4-வது துணை ஆளுநராக மைக்கேல் நியமிக்கப்பட்டுள்ளார்
தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகந்த தாஸும் துணை ஆளுநர்களாக என்.எஸ். விஸ்வநாதன், பி.பி. கனுன்கோ, எம்.கே.ஜெயின் ஆகியோர் உள்ளனர். யார் இந்த மைக்கேல் பத்ரா? மும்பை ஐஐடியில் டாக்டர் பட்டம் பெற்ற மைக்கேல் பத்ரா, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திலும் நிதி நிலைத்தன்மை குறித்து முனைவர் பட்டம் பெற்றவர். 

கடந்த 1985-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி பணியில் சேர்ந்த மைக்கேல் பத்ரா பல்வேறு பொறுப்புகளில் வகித்துள்ளார்.
மேலும், பொருளாதார ஆய்வுக்குழு, சர்வதேச நிதி, வங்கிப் பிரிவில் ஆலோசகராகவும் மைக்கேல் பத்ரா இருந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து நிதிக்கொள்கை குழுவில் பணியாற்றி வந்தார். 2017-ம் ஆண்டே துணை  ஆளுநர் பதவிக்கு மைக்கேல் பத்ரா விண்ணப்பம் செய்த நிலையில் அவருக்கு வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது