முரசொலி புதிய அச்சகம் திறப்பு… முதல்வர், கலாநிதி மாறன், கனிமொழி பங்கேற்பு!!
கலைஞர் கருணாநிதி தனது மூத்த பிள்ளையாக கருதிய முரசொலி நாளிதழுக்கு புதிய அச்சகம் அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி தனது மூத்த பிள்ளையாக கருதிய முரசொலி நாளிதழுக்கு புதிய அச்சகம் அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலிக்கு புதிய அச்சகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த அதிநவீன முறையிலான அச்சகத்தின் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம், செல்வி, கனிமொழி எம்.பி, தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த அச்சகத்தில் எளிய முறையில் குறைந்த நேரத்தில் முரசொலி நாளிதழ் அச்சிடப்படக் கூடிய வகையில் பல புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக திகழும் முரசொலியை, கருணாநிதி உயிருடன் இருந்த வரை தமது மூத்த பிள்ளையாகவே கருதி வந்தார்.
மேலும், முரசொலி மூலம் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது, எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி பதில் வடிவில் இடித்துரைப்பது, என நாள்தோறும் முரசொலிக்காக தனது பேனா முனையை கொண்டு கூர்மையான அர்த்தமுள்ள வார்த்தைகளை கருணாநிதி அளித்து வந்தார். அப்போதைய காலத்தில் திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள், கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை முரசொலி மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளப் பக்கங்கள் வந்துவிட்டதால் கட்சியினரின் செயல்பாடுகளை உடனுக்குடன் அதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இதனால் முரசொலி படிப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் முரசொலி நாளிதழை புதுப்பொலிவுடன் நவீன அச்சு இயந்திரம் மூலம் வெளியிடக்கூடிய வகையில் பல கோடி ரூபாய் செலவில் புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டு அச்சகம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டாரே தவிர முரசொலி ஆசிரியர் என்ற முறையில் முரசொலி செல்வம் தான் புதிய அச்சகத்தை திறந்து வைத்தார். இதனை கனிமொழி எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் புதிய அச்சகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மு.க.அழகிரியை தவிர மற்ற அனைவரும் கலந்துகொண்டனர். முரசொலி நாளிதழ் 80 ஆண்டுகளை கடந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நூற்றாண்டு விழாவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் முரசொலி நாளிதழில் புதிய கட்டுரை மற்றும் செய்தி பகுதிகள் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.