மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்த சரத்குமார் திடீர் திருப்பமாக அதிமுகவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் வரும் மக்களவை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர், பாஜகவையும், அதிமுக அரசையும் கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டிற்கு சென்று நேரடியாக சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போதைய அரசியலை விஜயகாந்திடம் எடுத்துச் சொன்னேன். அவர் வேறு முடிவை எடுக்க வேண்டும். அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நல்ல முடிவை விஜயகாந்த் எடுப்பார் எனக் கூறினார் சரத் குமார். 


திமுக- அதிமுக கூட்டணியை தவிர்த்து மூன்றாவது கூட்டணியை அமைக்கலாம் என விஜயகாந்திடம் சரத்குமார் அறிவிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து எந்த கட்சியும் சரத்குமாரை கூட்டணிக்கு அழைக்காததால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் நெல்லை தொகுதி சமக கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே அவர் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 

ஆகையால் நெல்லை மாவட்டத்திற்கு அவர் பரிச்சயமானவர் என்பதால் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அத்தொகுதி நிர்வாகிகள் அவரை வலியுறுத்தினர். ஆனால், சரத்குமார் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டு கூட்டணி இறுதியான நிலையில் அதிமுகவை ஆதரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  தனித்து போட்டியிட்டால் என்னவாகும் என்பதை அறியாதவரா சரத் குமார்..? இப்போது அதிமுக கூட்டணியை ஆதரித்தால் சீட் கிடைக்காது. ஆனால் சில உதவிகள் சரத்குமாருக்கு கிடைக்கலாம் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.