தமிழக பாஜக தலைவராக வழக்கறிஞர் எல்.முருகனை நியமித்து பாஜக பகட்டு காட்டினாலும், சில தலைவர்கள் அதனை உள்ளூர ரசிக்கவில்லை என்பதால் புதிய தலைவரை நியமிக்க அக்கட்சிக்குள் பூகம்பக்கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு டஜன் கணக்கான பிரதிநிதிகளின் பெயர் அடிபட, திடீர் திருப்பமாக தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வழக்கறிஞர் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டதை தமிழக பிரதிநிதிகள் யாருமே விரும்பவில்லை. சிறுபான்மையின காவலனாக திமுக தன்னை காட்டிக் கொண்டு வந்ததை தகர்த்தெறிந்து தாங்களும் சிறுபான்மையின மக்களின் தோஸ்துதான். திமுக தன்னை சிறுபான்மையின காவலனாக காட்டிக் கொண்டு வந்தாலும் எங்கே எங்கள் கட்சியை போல தாழ்த்தப்பட்ட ஒருவரை கட்சி தலைவராக்க முடியுமா? என இறுமாப்புக் கொண்டது பாஜக.

எல்.முருகனுக்கு பதவி கொடுத்து வெளியில் அழகு பார்த்தாலும் உள்ளுக்குள் குமுறித் தீர்த்து வருகின்றனர் பாஜக நிர்வாகிகள். அந்தக் குழப்பத்தால் இதுவரை மாநில அளவிலான நிர்வாகி பட்டியலை அறிவிக்காமல் வைத்திருக்கிறது பாஜக தலைமை. பொன்னார், ஹெச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் என ஒட்டுமொத்தமாக இணைந்து எல்.முருகன் தலைவராக அறிவிக்கப்பட்ட வருத்தத்தை தலைமையிடம் கொட்டித் தீர்த்து வருகின்றனர். 

எல்.முருகனுக்கெதிராக கொடிபிடித்து டெல்லிவரை தந்தியடித்துள்ள அவர்கள், ‘’நாம் என்னதான் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை தலைவராக்கினாலும், அந்த சமூகத்தவர்களின் ஆதரவை நாம் பெற முடியாது. ஆகவே சட்டமன்றத்தேர்தலுக்கு முன் தலைவரை மாற்ற வேண்டும்’’எனக் கூறி வருகிறார்களாம். இதுதொடர்பாக, பொன்னார், நயினார் நாகேந்திரன் என ஒரு பட்டாளமே தற்போது டெல்லி தலைவர்களை நச்சரித்து வருகிறதாம். ஆனால், பாஜக தலைமையோ, தற்போதைய நிலையில் எல்.முருகனை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால், அது பாஜகவுக்கு மிகப்பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். இப்போதைக்கு இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் தமிழக தலைவர்கள் விடாப்பிடிகாட்டி வருவதாக கூறுகிறார்கள்.