Asianet News TamilAsianet News Tamil

புதிய கல்விக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்..!! மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி

தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

New education policy needs to be reconsidered, Edappadi Palanichamy shocked the Central Government
Author
Chennai, First Published Aug 3, 2020, 11:29 AM IST

மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழகமுதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக, இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமயில் முக்கிய அமைச்சர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதன் முழு விவரம்:-

தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 1963ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதும், 1965ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து,மாணவர்களும், மக்களும், தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினர்.மக்களிடைய மும்மொழி கொள்கையைப் பற்றிய கவலைகள் நீங்காததால், பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.1968 அன்று“தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது” என்று வரலாறு போற்றத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றினார். 

New education policy needs to be reconsidered, Edappadi Palanichamy shocked the Central Government

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி, பாட திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களால் தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் மாண்புமிகு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் உறுதியான கொள்கையாக இருந்தது. அதன்படியே,அவர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, அதாவது, 13.11.1986 அன்று, இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மாண்புமிகு அம்மா அவர்கள், “இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம்” என்று சூளுரைத்தார். மேலும், இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், மாண்புமிகு அம்மா அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இவ்வாறு மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களும், இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர். 

New education policy needs to be reconsidered, Edappadi Palanichamy shocked the Central Government

இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் வழி வந்த மாண்புமிகு அம்மாவின் அரசும், மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதை சுட்டிக் காட்டி, அதனை தீவிரமாக எதிர்த்தது. மேலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இரு மொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து 26.6.2019 அன்றே மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை வலியுறுத்தி நான் கடிதம் எழுதினேன். இரு மொழிக் கொள்கையையே மாண்புமிகு அம்மாவின் அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரையிலும், சட்டமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், மாண்புமிகு அம்மாவின் அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். 

New education policy needs to be reconsidered, Edappadi Palanichamy shocked the Central Government

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில்  மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசுஅறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மாண்புமிகு பாரதபிரதமர் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios