ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் இருந்து விடாப்பிடியாக புதிய தமிழகம் கட்சி விலகியிருப்பது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம் என்று பேசிக் கொள்கிறார்கள்.

பாமக, தேமுதிக போன்ற பெரிய கட்சிகளே அதிமுகவை அனுசரித்து கூட்டணியில் இருந்து வருகின்றன. ஆனால் நாங்குநேரி தேர்தலில் அதிமுக ஆதரிக்க முடியாது என்று வெளிப்படையாக பேட்டி அளித்ததுடன் புதிய தமிழகம் கட்சியுடன் பிரச்சாரம் செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை முற்றுகையிட்டு பீதி கிளப்பினர் அந்த கட்சி தொண்டர்கள்.

அதோடு மட்டும் அல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி முறிந்துவிட்டது என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் கிருஷ்ணசாமி. தேவேந்திர வேளாளர் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கிருஷ்ணசாமி கூறியுள்ளார். ஆனால் விசாரித்து பார்த்தால் இதில் அவர் அரசியல் கணக்கு உள்ளது என்கிறார்கள்.

மேலும் கிருஷ்ணசாமி கூட்டணியை முறித்துக் கொண்டது தன்னிச்சையான முடிவு இல்லை என்றும் சொல்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாகவே கிருஷ்ணசாமியே இயக்குவது டெல்லி தான் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். அப்படி இருக்கையில் டெல்லி பிறப்பித்த உத்தரவை ஏற்று தான் கிருஷ்ணசாமி இந்த முடிவை எடுத்துள்ளதாக அடித்துச் சொல்கிறார்கள். மேலும் சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது.

ரஜினி தலைமையிலான அந்த கூட்டணியில் விஜயகாந்த், ராமதாஸ், கமல் போன்றோரை இடம்பெற வைப்பது தான் அமித் ஷாவின் மாஸ்டர் பிளான். மேலும் புதிய தமிழகம் போன்ற சிறிய கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துவிட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு வசதியாகவே கிருஷ்ணசாமியை கூட்டணியை முறிக்க வைத்துள்ளது டெல்லி என்கிறார்கள். விரைவில் ரஜினியை ஆதரித்து கிருஷ்ணசாமி பேசுவார் என்றும் அவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.