அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடைபெற்று வரும் சிபிஐ ரெய்டு குறித்து விரிவாக எடுத்துரைத்தாகவும், அப்போது நீங்க கிளம்பி போங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என பிரதமர் உறுதி அளித்ததாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் எடப்பாடியின் டெல்லி விஜயம் முடிந்த ஒரு சில நாட்களுக்குள் அவர் மீதான நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கை  தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு  இபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்..

மேலும் ஒரு மாதத்துக்குள் முதல கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது அழிக்க முடியாத ஆவணங்களை உள்ளடக்கிய வழக்கு என்பதால் இதற்கு நெடுஞ்சாலைத்துறையை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பாவார் எனவும் கூறப்படுகிறது.

ஒரு மாத விசாரணையில் இந்த முறைகேட்டுக்கு  முகாந்திரம் இருப்பதாக ஒரு வேளை சிபிஐ தெரிவித்தால் நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டிய கட்டாயம்  இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர்.

இதை வைத்து எடப்பாடி மீதான பிடியை இறுக்க முடிவு செய்துள்ள பாஜக, இபிஎஸ் தான் சொல்லுகிறபடியெல்லாம் ஆட வேண்டும் என நினைப்பதாக  கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பு அமைச்சர் செங்கோட்டையன் வசம் போக வேண்டும்  என பாஜக விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனை மனதில் கொண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்கிவிட்டு செங்கோடடையனை நியமிக்க மோடி தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு செங்கோட்டையனும் தலையாட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறைகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் அதிமுக மீதுள்ள ஊழல் இமேஜை  மாற்ற முடியும் என்றும் பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுகவும், பாஜகவும் இணைந்து சந்திக்க முடிவு செய்துள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.