தமிழத்தைப் பொறுத்த வரை ஏராளமான தொலைக்காட்சிகள் செயல்பட்டு வருகின்றன. பொழுதுபோக்கு, செய்தி, இசை, நகைச்சுவை, பக்தி, விளையாட்டு என கணக்கில் அடங்கா தொலைக்காட்சிகள் உள்ளன.

பொது மக்களும் தற்போது எந்த சேனலைப் பார்ப்பது என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த அளவுக்கு சேனல்கள் குவிந்து வருகின்றன. அதே போல் பெரும்பாலும் எல்லா  கட்சிகளுக்கும் தனித் தனியாக தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன.

அதிமுகவுக்கு நியூஸ் ஜெ தொலைக்காட்சி, அமமுகவுக்கு ஜெயா தொலைக்காட்சி, காங்கிரஸ் கட்சிக்கு வசந்த், மெகா தொலைக்காட்சிகள், தேமுதிகவுக்கு கேப்டன் தொலைக்காட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வெளிச்சம் தொலைக்காட்சி  என பெரும்பாலும் அனைத்துக் கட்சிகளுக்கும் டி.வி,க்களை உருவாக்கி வைத்துள்ளளனர்.

திமுகவைப் பொறுத்தவரை  அதற்கு ஆதரவாக ஆரம்பம் முதல்  சன் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. இதையடுத்து திமுக கட்சிக்கென கலைஞர் தொலைக்காட்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயல்பட்டு வருகிறது. கலைஞர், கலைஞர் செய்திகள், சிரிப்பொலி, இசையருவி, சித்திரம் என பல தொலைக்காட்சிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக மற்றுமொரு தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நிர்வாகத்தில் அந்த புதிய சேனல் உருவாகவுள்ளது.

கதிரவன் என பெயரிப்பட்டுள்ள அந்த சேனலுக்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள். எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் அனைவரும்  நிதியுதவி அளிக்க உள்ளனர்.

திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இந்த சேனலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் இந்த சேனல் தொடங்கப்படவுள்ளது.