எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தமிழகத்தில் இரண்டு மெகா கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. திமுக தலைமையில் காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியிலும். அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியிலும் உள்ளன.

இந்த அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், ஐஜேகே, புதியநீதி கட்சி போன்றவையும் இணைய உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் அதிமுக –பாஜக  சார்பில் தற்போது அவர்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த ஐஜேகே தற்போது அதில் இருந்து விலகியுள்ளதாக அக்கட்சியின் பாரி வேந்தர் அறிவித்துள்ளார். இதையடுத்து ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் மற்றும் ஐஜேகே கட்சிகள் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. இது தொடர்பாக கமல் மற்றும் பாரிவேந்தர் இருவரும் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்த கூட்டணி குறித்து அறிவிக்க உள்ளனர்.

இது  தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐஜேகே கட்சியின் தலைவர் பாரி வேந்தர், ஐஜேகே கட்சி சார்பில் பெரம்பலூர் தொகுதியை தான் கேட்டுப் பெறவுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் கள்ளக்குறிச்சி,  திருச்சி அல்லது தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் ஒன்றைப் பெற்று போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்,