சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு சீமான் பங்கேற்கும் கூட்டம் என்பதால் அந்த கட்சியின் நிர்வாகிகள் மட்டும் அல்லாமல் இளைஞர்கள் பலரும் அங்கு திரண்டிருந்தனர். கூட்டத்தினருக்கு மத்தியில் சீமான் பேச ஆரம்பித்தது முதலே அந்த இடத்தில் உற்சாகம் கரை புரண்டது.
   
தமிழர்களின் வீரம், போர்த்திறன் குறித்து சீமான் பேசிக் கொண்டிருந்த போது விசில் சப்தம் காதை பிளந்தது. ஆனால் உணர்ச்சிப் பெருக்கில் தான் என்ன பேசுகிறோம் என்பதை ஒரு கட்டத்தில் சீமான் மறந்துவிட்டார். பழம் தமிழ் அரசர்களுள் ஒருவர் அந்த காலத்திலேயே மரத்தில் கப்பல் கட்டி எதிரிகளுடன் போரிடச் சென்றதாக சீமான் பேசினார். அதிலும் 60 ஆயிரம் யானைகளை அந்த மரக்கப்பலில் ஏற்றிச் சென்றதாகவும் சீமான் கூறினார்.


   
சீமானின் இந்த பேச்சுக்கு கூட்டத்தில் இருந்த சிலர் உற்சாகமிகுதியில் ஆரவாரம் செய்தாலும், சிலர் சீமான் பேசுவது அபத்தம் என்பது தெரிந்த தலைகுனிய ஆரம்பித்தனர். ஆனால் சீமானோ எதுவும் தெரியாதது போல் பேச்சை முடித்துக் கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கினார். மரத்தினால் ஆன கப்பலில் 6 யானைகளை ஏற்றுவதே சவாலான விஷயம். அதிலும் 60 ஆயிரம் யானைகளை எப்படி ஏற்றி இருக்க முடியும் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
   
எந்த மன்னன் போரிடுவதற்காக 60 ஆயிரம் யானைகளை ஒரு கப்பலில் ஏற்றிக் கொண்டு எங்கு சென்றான் என்பதை சீமான் தெரிவிக்க வேண்டும் என்று சிலர் வெளிப்படையாகவே கருத்துகளை வெளியிட்டனர். மேலும் மைக் கிடைத்தால் போதும் எதை வேண்டுமானாலும் பேசுவது சீமான் போன்ற ஒரு இயக்கத்தின் தலைமை பதவியில் இருப்பவருக்கு அழகல்ல என்றும் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன.
   
ஏற்கனவே மாவீரன் பிரபாகரனுடனான சந்திப்பு குறித்து சீமான் பேசுவது பொய் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பழம் தமிழர்களின் வீரத்தை பேசுவதாக கூறிக் கொண்டு சீமான் உளறுவது ஏற்புடையதாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.