ஆட்சி மாறும் போது இந்த வீடியோக் காட்சிகளுக்கான விளைவுகள் நீதிமன்றங்களின் வழியாக தீர்ப்பாக வரும் அரசியல் விமர்சகரும், ஆன்மிக பேச்சாளருமான நெல்லை கண்ணன் எச்சரித்துள்ளார்.


 
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’மரியாதைக்கும், பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரிய திருமதி குஷ்பு சுந்தர் சி... முன்பொரு முறை பெண்கள் திருமணத்திற்கு முன்னர்  உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்றபோது பாஜக தமிழ்நாட்டிலேயே இல்லை. மற்றவர்கள் சிலர் பல காவல் நிலையங்களில் வழக்குகளைப் பதிந்தார்கள். மனுநெறியை விடுங்கள். பிரபல சித்த புருஷர் எஸ்.வி.சேகர் ஊடகங்களில் இருக்கின்ற பெண்கள் கற்பு நிலையையெல்லாம் தொலைத்து தான் பெரிய பதவிகளுக்கு வந்துள்ளார்கள் என்ற போது எடப்பாடியார் அவர் வீட்டுப் பால் பாக்கெட் கெட்டுப் போனதற்கு நல்ல பால்  பாக்கெட்டுகளை அதிகாரிகள் மூலமாகக் கொடுத்தனுப்பினார்.

வைரமுத்து என்கின்ற கருவாச்சிக் காவியம் தந்த கவிமகனின் தாயை எத்தனை அசிங்கமாக ஆபாசமாக ஹெச்.ராஜா பேசினார். ஒரு வீரக் குலத்துத் தாயை பேசினார். ஒரு தாயைப் பேசியதை பாஜக கண்டித்ததா? விடை தர இயலாதவர்கள் இவற்றுக்காக நடவடிக்கை எடுத்திருப்பின் எடப்பாடி பக்கம் நிற்கலாம். எங்கே அடிமைகள்... அடிமைகள்!

ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் சாதிகளைப் பற்றி நிறைய பண்பாடற்ற பதிவுகளை வீடியோக்களாக  யூ டியுப்பில்  பதிவேற்றுகின்றாரே... எடப்பாடியார், பெரியார், அண்ணா படங்களை எம்.ஜி.ஆர். படங்களை பெண்களுக்காக என்றும் குரல் கொடுத்த அம்மாவின் படத்தைப் போட தகுதி உடையவர்தானா? நேற்று கூட, தாய் குஷ்பு அவர்களைக் கைது  செய்து ஒரு ரிசார்ட்டிலே பத்திரமாக தங்க வைத்துள்ளது எடப்பாடி அரசு. பாராட்டுவோம். 

எஸ்.வி. சேகர் வீடியோ பதிவுகள், ஹெச்.ராஜா வீடியோ பதிவுகள், மகளின் பெயரில் ஒளிந்து கொள்ளும் ஒய்.ஜி மகேந்திரன் வீடியோக்கள் பத்திரமாக உள்ளன. ஆட்சி மாறும் போது இந்த வீடியோக் காட்சிகளுக்கான விளைவுகள் நீதிமன்றங்களின் வழியாக தீர்ப்பாக வரும்’’எனத் தெரிவித்துள்ளார்.