நாங்குநேரி தொகுதியில் தனித்து போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய திரு நெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளருக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 நாங்குநேரி தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்குள் அந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதில் திமுக - காங்கிரஸ் கட்சி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளில் ஒன்றான நாங்கு நேரியில் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. ஆனால், நாங்குநேரியில் போட்டியிட திமுக தயாராகிவருகிறது. இதுகுறித்து திமுக தலைமையுடன் காங்கிரஸ் தலைவர் அழகிரி பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முடிவை சொல்வதாக ஸ்டாலின் தெரிவித்ததால், காங்கிரஸ் முகாம் அதிர்ச்சியில் உள்ளது. 
 இந்நிலையில்  நாங்குநேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “தென் தமிழகம் காங்கிரஸ் கட்சியின் ஆனி வேர். காங்கிரஸ் கட்சியின் உயிர் நாடி. அதைப் பலத்தபடுத்தவே இந்தக் கூட்டம். 50 ஆண்டுகளாக நாம் எதிர்கட்சியாக இருக்கிறோம். தென் மாவட்டத்தில் பலமாக இருந்தும்தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தயவு இன்றி வெற்றி பெற முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார். 
இதன்மூலம் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதை காங்கிரஸ் கட்சியின் தலைமை மறுத்தது. இதற்கிடையே அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மீண்டும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் 7 நாட்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது..