வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு 2 ஆம் வகுப்பு ரயில் கட்டணம் இலவசமாக வழங்கப்படும் என்றும், மாணவருடன் செல்லும் ஒருவருக்கு 2 ஆம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவர் சேரக்கைக்காக வரும் 6 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் எழுத உள்ளனர். அவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும் என்றும் பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆகவே கூடுதல்
தேர்வு மையங்கள் ஏற்படுத்தி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்க போதிய காலம் இல்லை என்று சிபிஎஸ்இ பதிலளித்தது. சிபிஎஸ்இ கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய மறுப்பு தெரிவித்து. தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்த
தேர்வு மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு பயண கட்டணத்துடன் தங்கும் வசதி உள்ளிட்டவைகளை அரசு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் இது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அதற்கான பயணச் செலவு வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வெளி மாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் பயண செலவுக்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளர். தேர்வெழுதி முடித்துவிட்டு மாணவர்கள் பயணச்சீட்டுகளைக் கொடுத்து தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். பேருந்தில் பயணம் செய்தாலும் இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். வெளி மாநிலத்துக்கு மாணவருடன் செல்லும் ஒருவருக்கு 2 ஆம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்கள் அறிய பள்ளிக் கல்வித்துறையின் உதவி எண்ணாண 14417 எண்ணில் தொர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.