நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ள எல்லா மாணவர்களும் மருத்துவப் படிப்பில் இடம் பெறப் போவதில்லை என்பதும், அவர்கள் மீண்டும் பல முறை தேர்வு எழுதும் சூழல் உருவாகும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்;- நீட் தேர்வு முடிவுகள் வந்திருக்கின்றன. தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியில் +2 படித்த  மாணவர் ஜீவிதகுமார் இந்தாண்டு நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றார். வாழ்த்துகள்! ஆனால், இதை மட்டும் சுட்டிக்காட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் எல்லாம் நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெற்று மருத்துவர்கள் ஆகத்தொடங்கி விட்டார்கள் எனவும் , நீட் தேர்வுக்கு எதிரான அரசியல் கட்சிகள் வாயைப் ‘பொத்தலாம்’ என்கின்ற அளவுக்கு சில நாளேடுகளும், அறிவி ஜீவிகளும் குதிக்கத் துவங்கி இருப்பது நகைப்பிற்குரியது.

இப்போது இந்த மதிப்பெண் பெற்ற மாணவர் முதல்  முறையிலேயே ( First Attempt) இந்த மதிப்பெண் பெறவில்லை. கடந்த முறை அவர் நீட் எழுதிய போது பெற்ற மதிப்பெண் 193. இந்த ஆண்டு அவரால் 664 மதிப்பெண் பெற முடிகிறதென்றால் அவர் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து அதன் வாயிலாகத் தனியே பெற்ற பயிற்சி தான் காரணம். அதுவும் அவர் பால் அக்கறை கொண்ட ஆசிரியர்கள் நிதியுதவி செய்து தனியார் பயிற்சி மையத்தில் படிக்க வைத்ததால் சாத்தியமாகி இருக்கின்றது. 

இதில் இருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அரசுப்பள்ளியில் படித்து நேரடியாகத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நீட் தேர்ச்சி எப்போதும் எட்டாக்கனிதான். பயிற்சி மையங்களில் பல லட்சம் பணம் கட்டித் திரும்பத் திரும்ப பயிற்சி எடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் தேர்வெழுதும் மாணவர்களே வெற்றி பெற இயலுமே ஒழிய, சாதாரண ஏழை எளிய கிராமப் புற மாணவர்களுக்கு நீட் எப்போதும் தடைக்கல்லாக இருந்து அவர்களின் மருத்துவக் கல்விக் கனவுகளைச் சிதைக்கவே செய்யும். இன்னொன்று, நீட் தேர்ச்சி என்பதாலேயே எம். பி.பி.எஸ் இடம் கிடைத்து விடாது. 

அது விண்ணப்பிப்பதற்கான ஒரு தகுதி மட்டுமே. எனவே நீட் தேர்வில் தகுதி ( qualification) பெற்றுள்ள எல்லா மாணவர்களும் மருத்துவப் படிப்பில் இடம் பெறப் போவதில்லை என்பதும், அவர்கள் மீண்டும் பல முறை தேர்வு எழுதும் சூழல் உருவாகும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. இதை எல்லாம் மறைத்து நீட் வாராது வந்த மாமணி என குதூகலம் அடையும் பிரகஸ்பதிகள் தான் தங்கள் வாயைப் பொத்திக்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.