neet exam free coaching only for government school students
மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தும் விதமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 100 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் எனவும் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு மேல் 412 மையங்களாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படும் எனவும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி கிடையாது எனவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டிற்கு மட்டும் சுமார் 20000 மாணவர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்புகளின் மூலம் பயனடைவர். பயிற்சி வகுப்புகளின் நேரம் குறித்த அட்டவணை வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பன போன்ற விவரங்கள் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு அறிவிக்கப்படும் என்றார்.
