உத்தரபிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை அம்மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வகையில் 1983-ம் ஆண்டு ஒரு சிறப்பு சட்டத்தை பிறப்பித்து, நிர்வகித்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் காசி விஸ்வநாதர் கோயிலைப் போல சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தில்லை நடராஜர் கோயில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில் ஆகும். ஆனால், இந்தக் கோயிலை தாங்கள்தான் கட்டியதாகவும், தாங்கள் குறிப்பிடும் ஆகமவிதிகளின் படியே வழிபாட்டு முறைகள் அமைய வேண்டும் எனவும் தீட்சிதர்கள் கூறுகிறார்கள். கோயில் நிர்வாகத்தில் தீட்சிதர்களுக்கே முழுமையான உரிமை உள்ளதாக உரிமையும் கோருகின்றனர். இதர சமயச் சான்றோர்களை தமிழில் பாடவும் அனுமதிக்க மறுக்கின்றனர்.

வடலூர் வள்ளலார் தனது திருவருட்பாவை இந்த கோயிலில் அரங்கேற்ற விரும்பியபோது அதை தடுத்த தீட்சிதர்கள், அதன் பிறகும் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். சமீபத்தில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் பாட முயற்சித்த ஆறுமுக நாவலரை அனுமதிக்க மறுத்து தாக்கியது உட்பட அவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகள் இன்றளவும் தொடர்கின்றன. தீட்சிதர்கள், கோயிலை ஏதோ தங்கள் சொந்த சொத்து போல பாவிப்பதோடு, தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடரும் சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தில்லை நடராஜர் கோயிலை பாதுகாக்கவும், கோயில் நிர்வாக பொறுப்பை முழுமையாக தமிழக இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வரவேண்டும். 

அதற்காக தமிழக அரசு ஒரு சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உத்தரபிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை அம்மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வகையில் 1983-ம் ஆண்டு ஒரு சிறப்பு சட்டத்தை பிறப்பித்து, நிர்வகித்து வருகிறது. அதுபோல தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று அந்தக் கடிதத்தில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.