நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்றும், அப்படி யாரேனும் கூறினால் அதை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் குன்னம் எம்.எல்.ஏ., ராமசந்திரன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு கொடுமையால் தகுதியிருந்தும் மருத்துவம் படிக்க முடியாமல் போனதால் விரக்தி அடைந்த மாணவி அனிதா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தமிழகத்தையே உலுக்கியது. 

அவரின் தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இன்றும் அது தொடர்பான போராட்டங்கள் சென்னையில் நடத்தப்பட்டன. 

தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு அரசின் நிதி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

ஆனால், அனிதாவின் குடும்பத்தாரோ, நிதியை வாங்க மறுத்து விட்டனர். நீட் தேர்வில் நல்ல முடிவை ஏற்பட்ட பிறகு நிதியுதவி பெற்றுக் கொள்கிறோம் என்று திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில், சிதம்பரம் தொகுதி அதிமுக எம்.பி. சந்திரகாசி மற்றும் குன்னம் எம்.எல்.ஏ. ராமசந்திரன், அனிதாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்டம் குழுமூருக்கு சென்ற எம்.எல்.ஏ. ராமசந்திரன், எம்.பி. சந்திரகாசி, அனிதாவின் வீட்டுக்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர், குன்னம் எம்.எல்.ஏ. ராமசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து கிடைக்க வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்று யாரேனும் கூறினால் அதை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் குன்னம் எம்.எல்.ஏ. ராமசந்திரன் கூறியுள்ளார்.