இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நெடுவாசல் போராட்டக்குழுவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, ராமநாதன் ஆகியோர் தலைமையில் 16 பேர் சந்தித்தார். அப்போது அவர்கள், மு.க.ஸ்டாலினிடம் ஒரு மனு அளித்தனர்.

அதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குகு எதிராக போராட்டம் நடந்து கொண்டிருந்த போது மத்திய, மாநில அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோர் இத்திட்டம் செயல்படுத்த மாட்டோம் என உறுதி அளித்தனர்.

இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு, ஜெம் என்ற தனியார் நிறுவனமும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனால், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடும் வரை நீங்கள் அழுத்தம் கொடுத்து இத்திட்டத்தை தடை செய்வதற்கும் எங்களது வாழ்வாதாரம் பாழாகாமல் காப்பதற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, நெடுவாசல் போராட்டக் குழுவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது மத்திய, மாநில அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோர் இத்திட்டம் செயல்படுத்த மாட்டோம் என உறுதிமொழி கொடுத்தனர்.

ஆனால் தற்போது இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டுள்ளது. இதனால், நாங்கள் கடும் அதிர்ச்சியடைந்தோம். இந்த திட்டத்தை கொண்டு வந்தால் விவசாயம் மற்றும் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என்று எடுத்து கூறினோம்.

அதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவேன். உங்கள் போராட்டத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.