இரு நாடுகளுக்கும் இடையே எட்டபட்ட உடன்பாட்டின்படி சீனா நடந்து கொள்ளவில்லை என்றால், இந்திய ராணுவம் பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது என இந்திய பாதுகாப்பு துறை தலைவர் பிபின் ராவத் எச்சரித்துள்ளார். அமைதியான முறையில் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இந்தியா தயாராக உள்ள நிலையில் சீனா அதற்கு உடன்படாவிட்டால் இந்தியா அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டதையடுத்து இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால், எல்லையில் போர் மேகம் சூழ்ந்தது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற  நிலை நீடித்தது. ஆனால் அதற்கிடையில் இருநாட்டு ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளும் படைகளை பின் வாங்க முன்வந்தன. 

அதே போல் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், அந்நாட்டின்  வெளியுறவுத் துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையடுத்து, இருநாடுகளும் எல்லையிலிருந்து, படைகளை திரும்பப் பெற ஒப்புக்கொண்டன. அதைத்தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து சீனா படைகளை பின்வாங்கியது. அதுமட்டுமின்றி தளவாடங்களையும், படைகளையும் பின் வாங்குவதற்கான நேர அவகாசத்தையும் அது கோரியிருந்தது. அதேபோல இந்திய படைகளும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து பின்வாங்கின, ஆனால் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகள் பின்வாங்கப்பட்டன. ஆனால் விரல் பகுதி மற்றும் டெப்-சாங்  மற்றும் கோக்ரா  உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சீனா படைகளை பின் வாங்க மறுத்து வருகின்றன. மேலும் அங்கு அமைத்துள்ள கூடாரங்களை அது அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது, பல இடங்களில் இருந்து பின் வாங்கினாலும், ஒரு சில இடங்களில்  இருந்து பின் வாங்க மறுத்து வருகிறது. இது குறித்து இந்தியா பலமுறை சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில்,  இந்திய பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத் சீனாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சீனாவுடன் பிரச்சினையை அமைதியாக தீர்க்கும் வகையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது, ஆனால் அதன் மூலமும் சர்ச்சை தீர்க்கப்படாவிட்டால்  இந்திய ராணுவம் அதற்கு பதிலடிகொடுக்க தயாராக இருக்கிறது, இருப்பினும் அமைதியான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்வானில் ஜூன் 15-அன்று இந்தோ-சீனா மோதலுக்குப் பிறகு கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து துருப்புகளைத் திரும்பப் பெற இந்தோ சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே இரண்டு முறை கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்புகள் ஜூன்-30 மற்றும் ஆகஸ்ட்-8 ஆகிய தேதிகளில் சீனப் பிராந்தியத்திலுள்ள மோல்டோவாவில் நடைபெற்றது. விரல் பகுதி, டெப் சாங் மற்றும் கோக்ராவிலிருந்து சீனா படைகளை பின் வாங்க மறுத்து வருகிறது. அதே நேரத்தில் லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோட்டை சுற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அத்தகைய முயற்சிகளை கண்காணிக்கவும் ராணுவம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  ஆக அனைத்து நேரத்திலும் ராணுவம் தயாராக உள்ளது. 

பேச்சுவார்த்தையின் மூலமே சர்ச்சையை தீர்க்க அரசாங்கம் விரும்புகிறது. அதேநேரத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இந்திய ராணுவம் எல்லா நேரங்களிலும் தயாராக உள்ளது. அதேநேரத்தில் உளவு துறை அமைப்புகளுடன் ராணுவத்திற்கு ஒருங்கிணைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்தார், அனைத்து அமைப்புகளுக்கும் இடையே தகவல் தொடர்பு சரியாக உள்ளது என தெரிவித்த அவர், இந்திய எல்லைப் பகுதி 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ளது என கூறினார்.