மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனா கட்சிக்கு கவர்னர் அழைப்பு விடுத்தநிலையில்,  பாஜகவுடன் கூட்டணி இல்லை என சிவசேனா அறிவிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக்  அதிரடியாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி மத்திய அமைச்சர்  பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இல்லை என சிவசேனா அறிவித்தால் ஆதரவு பற்றி முடிவு செய்வோம் என்றார்.

சிவசேனாவிடம் இதுவரை எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. சிவசேனாவுடன் கூட்டணி குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தான் இறுதி முடிவு எடுப்பார்.  வரும் 12-ம் தேதி எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சிவசேனா தனக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளோடு சேர்த்து 170-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்ட்ரா  சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மற்றொரு கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றியது. பிற கட்சிகள் 16 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது நினைவுகூறத்தக்கது.