கடந்த 7 ஆம் தேதி சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

நேற்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆளுனரை சந்தித்து தான் சசிகலாவால் மிரட்டப்பட்டதாகவும் அதனால் தான் பதவியை ராஜினாமா செய்ததாகவும் விளக்கமளித்தார்.

பின்னர் ஆளுநர் தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து குடியரசுத்தலைவர், மத்திய உள்துறை அமைச்சகம், பிரதமருக்கு அறிக்கை அனுப்பியதாக தெரிகிறது.

இதனிடையே சில அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் காணவில்லை என்ற புகார்கள் அந்தந்த தொகுதிவாசிகள் மூலமாக கமிஷ்னர் அலுவலகத்தில் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம், யாரும் எங்களை துன்புறுத்தவில்லை. ஆளுநர் வரும்வரை கூட்டாக ஒற்றுமையாக இருந்து சசிகலாவை பதவியேற்க செய்வோம் என சில எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

தற்போது போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நவநீத கிருஷ்ணன் எம்.பி., கூறியதாவது,

தான் மிரட்டப்பட்டதாக கூறப்பட்ட நபர் முதலமைச்சராக இருக்க தகுதி அற்றவர்.

மிரட்டப்பட்டதாக தவறான தகவலை பன்னீர்செல்வம் பரப்பி வருகிறார்.

முறையாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பதவியேற்க அழைக்காமல் ஆளுநர் கால தாமதம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது.

விரைவில் ஆளுநர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அழைத்து பதவியேற்க வைப்பார் என நம்புகிறோம்.

சசிகலா முதலமைச்சராவதை தடுக்க பல சதிவேலைகள் நடக்கிறது.

3 முறை முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வம் அடைந்தும் பதவி ஆசை அவரை விடவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.