இதுவரை கண்டிராத அளவுக்கு தமிழகம் மிக மோசமான குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. மழைதான் கைகொடுக்கவில்லை என்றால், நாம் அதிகம் நம்பியிருந்த நிலத்தடி நீரும் கைவிரித்தது.

செல்போன் எடுத்தவுடன் ஹலோ சொல்வது போல, உங்கள் வீட்டில் தண்ணீர் இருக்கிறதா, தண்ணீர் வருகிறதா என்ற கேள்விகளே கணைகளாகத் தொடுக்கப்பட்டன. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது மக்களின் இயல்புதானே. இப்போதுதான் நீர்நிலைகளை தூர்வாறுவதும், மழை நீர் சேகரிப்புக்கான அமைப்புகளை ஏற்படுத்துவதும் என்று பரபரப்பாக செயல்படுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக மக்களுக்கு விடியோ மூலம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில், இறைவன் கொடுத்த கொடை மழை, அந்த மழை நீரை சேகரிப்பது அவசியம். தமிழக அரசும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தி வருகிறது.

200 சதுர அடி கொண்ட ஒரு வீட்டில் முறையாக மழை நீர் சேகரிக்கப்பட்டால், ஒரு குடும்பம் ஒரு வருடத்துக்குத் தேவையான நீரை சேமித்து வைக்கலாம்.

தமிழக மக்கள் அனைவரும் மழை நீரை சேமிக்க வேண்டும். இனி பெய்கின்றன ஒரு துளி மழை நீர் கூட வீணாகக் கூடாது. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செயல்படுத்துவோம். மக்கள் மத்தியில் மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மழை நீரை சேமிப்போம். நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக என்று வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் வியூகம் உருவாக்குபவர்களில் தேசிய அளவில் பிரபலமான பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம், அதிமுகவிற்கு வேலை பார்ப்பது இன்னும் கன்ஃபாம் ஆகாத நிலையில்,  தென்னிந்தியாவில் பிரபலமான தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் பிராண்டிங் டீம் , அமைச்சர் வேலுமணிக்காக களமிறங்கியுள்ளது. வேலுமணியின் இந்த பிரச்சாரம் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.