சட்டசபை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறியதால் நடவடிக்கை பாயும். ஆனால் பதவியை விட மக்களின் எண்ணமே எனக்கு முக்கியம் என மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதையடுத்து எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார். பின்னர், ஆதரவு எம்.எல்.ஏக்களின் கையொப்ப பட்டியலை கவர்னரிடம் எடப்பாடி அளித்ததால் அவரை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
அதன்படி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றுகொண்டார். ஆனால் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அவருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சிறப்பு சட்டபேரவை கூட்டம் நேற்று கூடியது.
இதனிடையே ஓ.பி.எஸ்க்கு சில எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்தனர். அதில் மயிலாப்பூர் எம்.எல்.ஏவான நடராஜ் மக்கள் விருப்பபடியே நான் வாக்களிப்பேன் எனவும், மக்கள் ஓ.பி.எஸ் பக்கம் நிற்கின்றனர். அதனால் நான் எடப்பாடிக்கு எதிராக வாக்களிப்பேன். இதனால் தன் பதவி பறிபோனாலும் கவலை இல்லை என தனது கருத்தை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்ததற்கு பின் தனது முகநூல் பக்கத்தில் சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பதிவு ஒன்றை நட்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:
சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பு ஜனநாயக விரோத அரசியலை நினைவுப்படுத்துகிறது. புதிய பாதையில் செல்வதற்கான வாய்ப்பு அதிமுக எம்எல்ஏக்களிடம் இருந்தது. ஆனால் அதை அவர்கள் தவற விட்டு விட்டார்கள். இது மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபையில், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கட்டும். பிறகு வாக்கெடுப்பு நடத்தலாம் என்று வலியுறுத்தினேன்.
மறைந்த ஜெயலலிதாவின் தாரக மந்திரம் 'மக்களால் நான் மக்களுக்காகவே நான் ' என்பது தான். எனவே, மக்களின் எண்ணங்கள் தான் சட்டசபையில் பிரதிபலிக்க வேண்டும்.
ஆனால் எம்எல்ஏக்களின் மக்கள் விரோத செயலால் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
எங்கள் கருத்துக்களை உன்னிப்பாக கேட்ட சபாநாயகர் சபையை ஒத்தி வைக்க மறுத்து விட்டார். ரகசிய ஓட்டெடுப்பு நடத்த முடியாது என கூறி விட்டார். அதற்கு பதில் அவசர அவசரமாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது.
கட்சியின் கொறடா உத்தரவை நான் மீறியதால், நடவடிக்கை பாயும். இருப்பினும், என் மனசாட்சி தெளிவாக இருக்கிறது. மக்களின் எண்ணங்களை நான் பிரதிபலித்தேன் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளேன்.

பதவி என்பது எனக்கு பெரிதல்ல. சரியான விஷயங்களுக்கு ஆதரவு தர வேண்டும். மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் நான் ஒரு மக்களின் சேவகன். மக்களை விட நான் அதிகாரம் மிக்கவன் என ஒரு போதும் நினைக்க மாட்டேன்.
இவ்வாறு நட்ராஜ் கூறியுள்ளார்.
