பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் சுற்றுப்புறத்தை தூய்மை செய்யும் துப்புரவு பணியில் தானே ஈடுபட்டுள்ளார் இந்தியாவின் தங்கமகன் என்று அனைவராலும் பாராட்டப்படும் பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம்.

வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம்,   சர்வதேச அளவில் பல போட்டிகளில் இந்தியாவின் சார்பில்  பங்கேற்று பல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை  சேர்த்தவர் சதீஷ் சிவலிங்கம்.  சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் பங்குபெற்று தங்க பதக்கம் வென்று அனைவராலும் தங்கமகன் என்று பாராட்டப்படுபவர் ஆவார்.  இந்நிலையில் தான் வசிக்கும் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் சேறும் சகதியுமாக உள்ளது எனக்கூறி,  உடனே அதை சீர் செய்து தருமாறு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார். அது குறித்து பலமுறை ட்விட் செய்த அவர்,  இணையதளத்தில் புகார் தெரிவித்தார். ஆனாலும் அந்த புகார் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தூய்மை இந்தியா திட்டத்தில் பதில் வந்தது. அதை கண்டு  சதீஷ் சிவலிங்கம் அதிர்ச்சியடைந்தார். நடவடிக்கை எடுக்காமலேயே நடவடிக்கை எடுத்ததாக கூறும் ஏமாற்று வேலையை கண்டித்துள்ள அவர். 

இனி இந்த விவகாரத்தில் அதிகாரிகளை நம்பி பயனில்லை என்ற முடிவு செய்து, தனது நண்பர்களுடன் இணைந்து தங்கள் பகுதியை தானே  தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். தான் துப்பரவில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அவர். அதில்,  பலமுறை புகார் கொடுத்தும்  மாநகராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் கூறினார்.  தூய்மை இந்தியா திட்டம் வேலூரில் செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்க அதிகாரிகளையும், ஊழியர்களையும்  நம்பி இனி பயனில்லை,  நம் சுற்றுப்புறத்தை நாம்தான்  தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.  டெங்குவில் இருந்து நாமே நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என அவர் அந்த வீடியோவில் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தங்கம் வாங்கி கொடுத்து சர்வதேச அளவில் பெருமை சேர்த்த சிவலிங்கம்,  தங்கமகன் என்று  போற்றப்படும் சிவலிங்கம் சொல்லியே இத்தனை அலட்சியம் என்றால் சாமானியர்கள் சொல்லியா அதிகாரிகள் கேட்கப் போகிறார்கள் என்று பலர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.  சிவலிங்கத்தின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.