தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தமிழகத்தில் இன்று கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஜனவரி 29 முதல் 31-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். நட்டாவின் வருகை தமிழகத்தில் பாஜகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும்.


தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று கண்டிப்பாக அதிகாரத்துக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். தமிழக பாஜக நடத்திய வேல் யாத்திரை, நம்ம ஊர் பொங்கல் விழாக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்துக்கு மட்டும் பிரதமர் மோடி ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு திட்டங்களை இதுவரை வழங்கியுள்ளார். இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. இதனால் தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.” என்று சி.டி.ரவி தெரிவித்தார்.