முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் உள்ளது. இதற்கு நீதி விசாரணை வேண்டும் என கூறி ஓ.பன்னீர்செல்வம்  இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 36 இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால், அனைத்து பகுதியிலும் பரபரப்பு நிலவி வருகிறது.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் கொண்டுள்ளதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதையொட்டி, திண்டுக்கல் பகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். உண்ணாவிரத பந்தலில், நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:-

தற்போது சசிகலா அணியில் உள்ள செங்கோட்டையன், ஜெயகுமார் உள்பட அனைத்து அமைச்சர்களும், பதவியை தக்க வைத்து கொள்வதற்காக, நாங்கள் நடத்தும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை கண்டு புலம்புகிறார்கள்.

இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவரும் தொண்டர்களை, உள்ளூர் அமைச்சர்கள் ஆங்காங்கே முகாமிட்டு, அவர்களை தடுத்து நிறுத்துகின்றனர். இப்போது, சசிகலா அணியில் உள்ள எம்எல்ஏக்களும், எம்பிகளும் விரைவில் ஓ.பி.எஸ். அணிக்கு வருவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.